இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் செய்னா நேவலுக்கு, மத்திய விளையாட்டு அமைச்சர் எம்.எஸ்.கில், ராஜிவ் கேல் ரத்னா விருது வழங்கினார்.
இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச விருது ராஜிவ் கேல் ரத்னா. இது பதக்கம் மற்றும் 7.5 லட்ச ரூபாய் மதிப்பு கொண்டது. இந்த விருது, இந்த ஆண்டு பாட்மின்டன் நட்சத்திரம் செய்னா நேவலுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 29ல் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் விருதுகளை வழங்கினார். அப்போது செய்னா நேவல், பாரிசில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சென்றிருந்ததால், விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று டில்லியில் நடந்த சிறிய விழாவில், மத்திய விளையாட்டு அமைச்சர் எம்.எஸ்.கில்லிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,"" பாரிஸ் தொடரில் பங்கேற்றதால், ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் செய்னா நேவல் பங்கேற்கவில்லை. இதனால் எம்.எஸ்.கில், நேற்று செய்னாவுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான பயிற்சி:இதனிடையே சீனாவில் துவங்கும் (நவ., 12) ஆசிய போட்டிக்காக சிறப்பான பயிற்சி பெற்றுள்ளதாக செய்னா நேவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்னா நேவல் கூறியது: சொந்த மண்ணில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது அதிக மகிழ்ச்சியை தந்தது. குறிப்பாக ஆசிய போட்டி துவங்கும் நேரத்தில் கிடைத்தது, அதிக ஊக்கத்தை தந்துள்ளது. ஆனால் ஆசிய போட்டி, காமன்வெல்த் போட்டியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
ஏனெனில் இதில் இந்தோனேசியா மற்றும் சீன வீராங்களைகள் பங்கேற்பார்கள். ஆனால் இவர்களை இதற்கு முன், இந்திய வீரர்கள் சிறப்பான முறையில் எதிர்கொண்டுள்ளனர். இதனால் இம்முறையும் மனஉறுதியுடன் செயல்பட்டு அசத்தலாம். தகுதி உள்ளது:ஆசிய போட்டிக்காக இம்முறை சிறப்பாக தயாராகி உள்ளேன். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளேன். இதுகுறித்து மட்டுமே முதலில் கவனம் செலுத்துவேன். தவிர, பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா, கலப்பு இரட்டையரில் ஜுவாலா கட்டா, திஜு ஜோடி, ஆண்கள் ஒற்றையரில் காஷ்யர் ஆகியோர் கடும் சவாலை சந்திக்க வேண்டியது இருக்கும். இருப்பினும், இவர்களுக்கு சிறப்பான வெற்றிகளை பெறும் தகுதியுள்ளது. இவ்வாறு செய்னா நேவல் தெரிவித்தார்.
| அடுத்தது > |
|---|




