சூதாட்டக்காரர்களின் அச்சுறுத்தலால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான்
கிரிக்கெட் அணியின் விக்கட் காப்பாளர் சுல்கர்னைன் ஹைதர்.துபாயிலிருந்து லண்டனுக்குத் தப்பிவந்துள்ள 19 வயதான அவர் அங்கு அரசியல் புகலிடம் கோரியுள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெறுவதற்கான ஓட்டத்தை எடுத்தவர் இவரே.வெற்றி பெறுவதற்கான அந்தப் பந்தை அடித்தது முதல் தன்னை கொல்லப் போவதாக சூதாட்டக் காரர்கள் மிரட்டி வருவதாக சுல்கர்னைன் ஹைதர் தெரிவித்துள்ளார்.
நானும் எனது குடும்பமும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவதால் கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதே சிறந்தது எனக்கருதுவதாக அவர் பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.”நான் கைது செய்யப்படவில்லை பத்திரமாக இருக்கின்றேன்.
ஆனால் என்னுடைய பாதுகாப்புக் கருதி எங்கு உள்ளேன் என்பதைக் கூற முடியாது எனது தாய் நாட்டின் மானம்,கௌரவம் என்பனவற்றை விற்பதிலும் பார்க்க நான் விலகிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் குடிவரவு அதிகாரிகள் தன்மீது கருணை காட்டியதாகவும் ஆலோசகர் ஒருவரின் வேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு தனக்கு அறிவுறை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னை அச்சுறுத்தியவர்கள் யார் என்பதை அவர் வெளியிடவில்லை.நான்காம் மற்றும் ஐந்தாம் ஒரு நாள் போட்டிகளின்போது தன்னை சூதாட்டக்காரர்கள் அனுகியதாகவும் அவர்களது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| < முன் | அடுத்தது > |
|---|




