Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back விளையாட்டு காற்பந்தாட்டம் ஆசிய விளையாட்டு கால்பந்து: இந்தியா தோல்வி

ஆசிய விளையாட்டு கால்பந்து: இந்தியா தோல்வி

ஆசிய விளையாட்டு கால்பந்து: இந்தியா தோல்வி

ஆசிய விளையாட்டு கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி, கத்தாரிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் கடைசி

10 நிமிடங்களில் சொதப்பியது, இந்தியாவின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. சீனாவில் உள்ள குவாங்சு நகரில், 16வது ஆசிய விளையாட்டுபோட்டி வரும் 12ம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னதாக, கால்பந்து லீக் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. நேற்று நடந்த "டி பிரிவு போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் கத்தாரை எதிர்கொண்டது. இந்திய வீரர்கள் துவக்கத்தில் அசத்தலாக ஆடினர். ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் தர்மராஜ் ராவணன், தலையால் முட்டி அபாரமாக கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் கத்தார் அணியினர் தவித்தனர்.

கீப்பர் காயம்:

இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் கோல்கீப்பர் லட்சுமிகாந்த் கட்டிமணிக்கு காயம் ஏற்பட்டது, இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. கத்தார் வீரர் சலே முகமது அடித்த பந்தை தடுக்க முயன்ற இவர், கழுத்து வலியால் அவதிப்பட்டார். உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவருக்கு எம்.ஆர்.ஐ., "ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில், பெரிய அளவில் பிரச்னை இல்லை என்பது தெரிய வந்தது.கட்டிமணிக்கு பதிலாக களமிறங்கிய கோல்கீப்பர் குர்பிரீத்சிங் படுமட்டமாக செயல்பட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட கத்தார் அணியின் முன்கள வீரர் ஜரல்லா அலி (80வது நிமிடம்), தலையால் முட்டி ஒரு அசத்தல் கோல் அடித்தார். இதையடுத்து போட்டி 1-1 என சமநிலைக்கு வந்தது. பின் 88வது நிமிடத்தில் ஜரல்லா அலி இன்னொரு கோல் அடித்து, அணிக்கு வெற்றி தேடி தந்தார். கடைசி 10 நிமிடங்களில் சொதப்பிய இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.

ஏற்கனவே குவைத்திடம் தோல்வி அடைந்த இந்திய அணி, தனது அடுத்த போட்டியில் சிங்கப்பூரை கட்டாயம் வெல்ல வேண்டும். அப்போது தான் "நாக்-அவுட் முறையிலான அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இது குறித்து இந்திய பயிற்சியாளர் சுக்விந்தர் சிங் கூறுகையில்,""முதல் பாதியில் நமது வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடைசி கட்டத்தில் இரண்டு கோல்களை விட்டுக் கொடுத்தது துரதிருஷ்டவசமானது. சிங்கப்பூரை வீழ்த்தும் பட்சத்தில், அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது,என்றார்.

 


தொடர்புடைய செய்திகள்: