விஜய், அஜீத் திடீரென சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு புளியந்தோப்பில் உள்ள பின்னி மில்லில் நடந்தது. அஜீத் மங்காத்தா படப்பிடிப்புக்காக
அங்கு முகாமிட்டு இருந்தார். விஜய் பக்கத்து அரங்கில் வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார்.
படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் சந்தித்து பேசினர். இருவரையும் அரசியலில் இணைத்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் தேர்தலுக்கு முன் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.
திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் புது கட்சி துவங்குவதா அல்லது ஏதேனும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா என்ற முடிவை அறிவிக்கிறார். தேர்தல் பிரசாரத்தில் நிச்சயம் குதிப்பார் என நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அஜீத் சந்தித்து பேசினார்.
இதையடுத்து அவரும் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் பரவின. அஜீத் அரசியலில் ஈடுபட வலியுறுத்தி ரசிகர்கள் பல்லாவரத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அஜீத் எதிர்ப்பால், கடைசி நேரம் இக்கூட்டம் ரத்து செய்யப் பட்டது.
சந்திப்பின் போது விஜய்யும், அஜீத்தும் அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. விஜய்யின் காவலன் படத்துக்கு ஒத்துழைக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். சுறா படத்துக்கு அவர்கள் நஷ்ட ஈடு கேட்டு வருகிறார்கள். இந்த விஷயம் குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.
| < முன் | அடுத்தது > |
|---|




