தமிழ் மக்கள் துன்பப்படும் போதும் துயரப்படும் போதும் துடிதுடித்த தியாகராஜா மகேஸ்வரன் மக்களுக்காகவே தனது உயிரையும் துறந்தார்.
அன்னாரின் பிறந்த தின நினைவுநாள் இன்றாகும்.
1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இந்த மண்ணில் பிறந்த மகேஸ்வரன் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
2008 ஆம் ஆண்டு வருடம் பிறந்து சில மணிநேரத்தில் இந்தக் கொடுமை நிகழ்ந்தது. துப்பாக்கிச் சூட்டினால் மகேஸ்வரனின் உயிர் துறந்த செய்தியானது தமிழ் மக்களின் நெஞ்சங்களை ஒரு கணம் உலுக்கியிருந்தது.
1966 ஆம் ஆண்டு பிறந்த மகேஸ்வரன் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரை அங்கு பயின்ற அவர் பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமக வர்த்தகத்தில் ஈடுபட்டார். படிப்படியாக முன்னேறிய அவர் தொழில் அதிபரானார். அவரது அரசியல் பிரவேசமானது 1999 ஆம் ஆண்டு இடம்பெற்றது.
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் போட்டியிட்டனர். இந்த வேளையில் யாழ். குடாநாட்டில் ரணிலின் குடாநாட்டுக்கான தேர்தல் முகவராக அவர் கடமையாற்றியதுடன் கணிசமான வாக்குகளையும் ரணிலுக்குப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தத் தேர்தலில் ரணில் தோல்வியை தழுவியிருந்த போதிலும் குடாநாட்டில் சந்திரிகா குமாரதுங்கவை விட சொற்ப வாக்குகள் குறைவாக அவருக்குக் கிடைத்திருந்தது. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மகேஸ்வரன் ஐ.தே.க.வின் முதன்மை வேட்பாளராக யாழ்.குடாநாட்டில் போட்டியிட்டு பெரும் சவால்களுக்கு மத்தியில் வெற்றி வாகை சூடியிருந்தார்.
2000 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரான மகேஸ்வரன் சில மாதங்களில் பாராளுமன்றத்துக்கு மாட்டு வண்டியில் சென்று போராட்டம் நடத்தினார்.
வட பகுதியில் எரிபொருளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலமது. எரிபொருள் தடையினைக் கண்டித்தே அவர் இந்தப் போராட்டத்தினை நடத்தினார். மகேஸ்வரனின் மாட்டு வண்டில் போராட்டமானது சர்வதேச ரீதியில் அன்றைய அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியினை ஏற்படுத்தியது. அத்துடன் மகேஸ்வரன் தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யக்கூடியவர் என்பதையும் நிரூபித்தது.
2001 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனையடுத்து யாழ்.மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட்டு மகேஸ்வரன் வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து மகேஸ்வரனுக்கு கலாசார அமைச்சு வழங்கப்பட்டது. இந்துக் கலாசார அமைச்சராக அவர் 2004 ஆம் ஆண்டு வரையான இரண்டரை வருட காலப்பகுதிவரை கடமையாற்றினார்.
அந்தக் குறுகிய காலப்பகுதியில் அவர் சா தித்த சாதனைகள் பலவாகும். இரண்டாவது உலக இந்து மாநாட்டினை வெகு சிறப்பாக கொழும்பில் நடத்தினார். தீபாவளிப் பண்டிகையைத் தேசிய விழாவாகப் பிரகடனப்படுத்தினார். நந்திக் கொடியின் மகிமையினை இலங்கையில் உணரச் செய்தார். செல்வச்சந்நிதி ஆலயத்தில் எரிக்கப்பட்ட தேருக்குப் பதிலாக புதிய தேரை அமைத்துக் கொடுத்தார். ஆலயங்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.
யுத்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்குக் குடாநாட்டில் வீடமைப்புத் திட்டத்தினையும் அமைத்தார். நிர்க்கதியாக உதவி கோரி வந்தவர்களுக்கு உதவினார். இவ்வாறு அவர் செய்த பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை அரசாங்கம் எடுத்த போதெல்லாம் அதற்கெதிராகக் குரல் கொடுத்தார். கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பலமுறை முரண்பட்டுள்ளார். எத்தனையோ தடவை கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
சொல்வதைச் செய்யும் செய்வதைச் சொ ல்லும் பண்புள்ள மகேஸ்வரன் தமிழ் மக்களின் விடிவுக்காகவே பாடுபட்டார். 2004 ஆம் ஆண்டு மீண்டும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது யாழ்.குடாநாட்டில் போட்டியிட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.
தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக யாழ்.குடாநாட்டிலிருந்து அரசியல் அகதியாக மகேஸ்வரன் கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக குடாநாட்டில் அவர் போட்டியிடாது கொழும்பில் போட்டியிட்டார். அப்போது கொழும்பில் அவர் வெல்வது கடினம் என்றே பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போது அவரது செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்டு பொறுக்க முடியாத சக்திகள் கொச்சிக்கடை ஜிந்துப்பிட்டியில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் தலையில் காயமடைந்த மகேஸ்வரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் இருந்தபடியே அவர் வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தார். தமிழ் இளைஞர்கள் வகை தொகையின்றி கைது செய்யப்பட்ட பொழுதும் வெள்ளை வானில் கடத்தப்பட்ட போதும் படுகொலை செய்யப்பட்ட போதும் அதற்கெதிராகக் குரல் கொடுத்தார். ஒரு தடவை பாராளுமன்றத்தில் செங்கோலையும் எடுத்துக் கொண்டு ஓடியிருந்தார்.
இதனைவிட கொழும்பிலுள்ள லொட்ஜ்களிலிருந்து தமிழர்கள் பல பஸ்களில் ஏற்றப்பட்டு வவுனியாவுக்கு படையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஆவேசமாக உரையாற்றிய அவர் தனது மேலங்கியை கழற்றி எறிந்தும் தனது எதிர்ப்பைக் காட்டினார். தமிழ் இளைஞர்கள் வகை தொகையின்றி கைது செய்யப்பட்ட போது காலி முகத்திடலிலிருந்து அலரிமாளிகை வரை அவர் ஊர்வலமாகச் சென்று எதிர்ப்பைக் காட்டினார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் தமிழ் மக்கள் மீது அவர் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதற்கு சான்றாக அமைந்திருந்தது.
தமிழ் மக்களை நேசித்து தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்த மகேஸ்வரன் கொழும்பு வெள்ளவத்தையில் இந்துக்கல்லூரி ஒன்றினை சர்வதேச தரத்தில் ஆரம்பிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தார்.
அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது உயிர் பறிக்கப்பட்டது. ஓர் ஆணின் வளர்ச்சிக்குப் பின்னால் பெண் ஒருவர் இருப்பார். அதேபோல் மகேஸ்வரனின் வளர்ச்சிக்குப் பின்னால் அவரது மனைவி விஜயகலா மகேஸ்வரன் இருந்து செயற்பட்டார். கணவனுக்கு நடந்த விபரீதத்தை தாங்க முடியாது துடிதுடித்த அவர் மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்பதற்கு அமைவாக அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்வதற்காக அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
அரசியலையே வெறுத்து வந்த திருமதி விஜயகலா மகேஸ்வரன் தனது கணவனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்வதற்காகவும் முன்வந்துள்ளதுடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.
மகேஸ்வரன் போன்றதொரு தலைவன் இன்றைய சூழலில் உயிர்வாழ்ந்திருந்தால் தமிழ் மக்களுக்கான குரல் ஓங்கி ஒலித்திருக்கும். இன்றைய நிலையில் அவ்வாறான ஒரு தமிழ்த் தலைவனின் வெற்றிடம் ஏற்பட்டமை தமிழ் மக்கள் செய்த பாவமேயாகும்.
இன்று தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது இனவாதம் மீண்டும் வித்திடப்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றபோது அதற்கெதிராகக் குரல் கொடுப்பதற்கு எவருமே இல்லாத நிலையே காணப்படுகின்றது.
8 வருடங்கள் முழுமையான அரசியலில் ஈடுபட்ட மகேஸ்வரன் தமிழ் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதுடன் தன்மானம் காத்த தமிழனாகவும் வாழ்ந்தார். அவரது சேவைகளை தமிழ்ச் சமுதாயம் என்றும் மறக்காது.
மறைந்தாலும் மக்கள் மனதில் மகேஸ்வரன் வாழ்கின்றார், வாழ்வான் என்பது மட்டும் திண்ணம்.
| < முன் | அடுத்தது > |
|---|




