Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இலங்கை மக்கள் ஆக்கம் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அணுகுமுறையை வடக்கு கிழக்கில் அரசு கையாளுகிறதா?

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அணுகுமுறையை வடக்கு கிழக்கில் அரசு கையாளுகிறதா?

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அணுகுமுறையை வடக்கு கிழக்கில் அரசு கையாளுகிறதா?

ஜனவரி 8 ஆம் திகதியுடன் பிரபல பத்திரிகையாளரான லசந்த விக்கிரமசிங்க படுகொலை செய்யப்பட்டு இரண்டாவது வருடங்களாகியுள்ளது.

இவரை கொலை செய்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாது தண்டிக்கப்படாது சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழ்கின்றனர்.

இன்றுவரையில் லசந்தவின் படுகொலை பற்றி எந்தவித சுதந்திரமான விசாரணையும் நடைபெறவில்லை. ஆனால் பொதுமக்களை திருப்திப்படுத்தும் வழமையான அறிக்கைகள் மட்டும் அரசினால் வெளியாகின்றன.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை ஓரம் கட்டி விட்டு போரை தாம் விரும்பிய விதமாக அரசு நடத்தி, விடுதலைப் புலிகளை வெற்றி கண்டுள்ளது. “சமாதானத்திற்கான போர்“, “அப்பாவி மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான போர்“, “விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது“ போன்ற வாசகங்களை பாவித்து அரசு போரை நடத்தியது. அதற்கு சர்வதேச சமுதாயத்தின் ஆதரவு 2005 ஆம் ஆண்டு முதல் கிடைக்கப் பெற்று, தமிழீழ விடுதலைப் புலிகளை அரசு வெற்றி கண்டது.

போர் முடிந்து இப்பொழுது ஏறக்குறைய பத்தொன்பது மாதங்களாகியும் இதுவரை பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை.

வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் எந்தவித சுதந்திரமோ, சந்தோஷமோ, சௌகரியங்களோ இல்லாது மிகவும் மோசமான அட்டூழியங்களின் மத்தியில் வாழ்கின்றனர். உண்மையை கூறுவதானால் கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் வடக்கு கிழக்கு வாழ் மக்கள், தற்போதைய அரசையோ, ஜனாதிபதியையோ ஆதரிக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.
அரசு கூறுவது போல், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதானால், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதால் தான் இது ஏற்பட்டது என்றால், எதற்காக வடக்கு கிழக்கு வாழ் மக்களின் சனத் தொகைக்கும் மேலாக இராணுவத்தினரை தற்பொழுதும் அங்கு நிலைகொள்ள வைத்துள்ளனர்.

எதற்காக பெரும் தொகையான சோதனைச் சாவடிகள் தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கென வடக்கு கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் உள்ளன? ஏன் இன்றும் சுற்றி வளைப்பு, கைதுகள் நடைபெறுகின்றன? இன்றும் ஏன் பயங்கரவாதச் சட்டம் அவசரகால நிலையும் இலங்கைத் தீவில் தொடர்கின்றன? என்பது சிந்தனைக்குரியதே!

அபிவிருத்திகள் ஏன் தெற்கில்;?

தற்பொழுது இலங்கைத் தீவில் நடைபெறும் அபிவிருத்திகள் யாவும் அம்பலாங்கொடையையும் அதனை அண்டிய பகுதிகளில் மட்டுமே நடைபெறுகின்றன. புதிய விமான நிலையம், துறைமுகம், பெருந் தெருக்கள் யாவும் முன்னைய கோட்டை இராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே நடைபெறுகின்றன.

இந்த அபிவிருத்தி பணிகள் யாவும் ஏதும் எதிர்காலத்தை மையமாக கொண்டு நடைபெறுகின்றனவா? தற்செயலாக ஒரு வெளிநாடு அல்லது அயல்நாடு இலங்கைத் தீவு மீது படையெடுத்தால் முன்னைய மூன்று இராஜ்ஜியங்களின் அடிப்படையில் நிர்வாகப் பிரிவுகளாக மாற்றி, வேறு ஒரு வெளிநாட்டின் உதவியுடன் தெற்கை தன்னும் கையில் வைத்திருப்பது அரசின் நோக்கமா? தெற்கில் மட்டும் நடைபெறும் அரசின் அபிவிருத்தி வேலைகள் நிச்சயமாக சந்தேகத்திற்குரியனவே.

ஜனாதிபதியும் அரச தரப்பினரும் சிறீலங்கா யாவருக்கும் உரியது. யார் விரும்பினாலும் எங்கும் குடியேறலாம் என்கிறார்கள். இவ்வசனங்கள் நிச்சயம் சர்வதேச சமுதாயத்திற்கு மிக இனிமையாகவே இருக்கும். இவ்வாசகம் உண்மையானால,; சிறீலங்காவின் சன மதிப்பீட்டு இலாகா, மாவட்ட ரீதியாக புள்ளி விவரங்களை இன அடிப்படையில் வெளியிட வேண்டும். விசேடமாக முன்னைய கோட்டை இராஜ்ஜிய பிரதேசங்களில் 1960 ஆம் ஆண்டு முதல் இன ரீதியாக புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.

அதேவேளை, தமிழ் இராஜ்ஜியமான வடக்கு கிழக்கில் இன ரீதியாக நீங்கள் விரும்பிய ஆண்டின் புள்ளி விவரங்களை வெளியிடும் பொழுது, ஒரு குழந்தைப் பிள்ளை கூட தமிழ்ப் பேசும் மக்கள் மீதான அரசின் அழிப்புத் திட்டங்களை அறிய முடியும்.

வடக்கு கிழக்கில் நூற்றாண்டுக்கு மேலாக சந்ததி சந்ததியாக வாழ்ந்த மக்கள், கடந்த இரண்டு சகாப்தங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து தமது சொந்த வீடு மனைகள் சொத்துக்களை இழந்து முகாம்களில் வாழ்கின்றனர். இம் மக்களுகள் தமது இருப்பிடத்திற்கு திரும்ப வழியோ எந்த முதன்மையோ கொடுக்காத அரசு, தெற்கிலிருந்து மக்களை வரவேற்று யாழ்ப்பாணத்தின் முக்கிய நகரங்களில் குடியேற்றுகின்றன.

எதற்காக பாலஸ்தீன மக்கள் மீதான “இஸ்ரேலின்“ அணுகுமுறையை சிறிலங்கா அரசு வடக்கு, கிழக்கில் கையாள்கிறது?இப்படியான குடியேற்றங்கள், நீண்ட காலத்தில், குடியேறிய அப்பாவி மக்களுக்கு வாழ்நாள் தொல்லையை அரசு தேடிக் கொடுத்துள்ளது.

புலம் பெயர் வாழ் மக்கள்

ஜனாதிபதியும் அரச தரப்பினரும் வெளிநாடுகளில் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட வடக்கு கிழக்கு வாழ் மக்கள் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்வது பற்றி அறிந்திருப்பார்களென்பதை நம்கிறேன். அதுமட்டுமல்லாது மற்றைய பிரதேசங்களிலிருந்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அரசியல் தஞ்சம் பெற்று வெளிநாடுகளில வாழ்கின்றனர்.

யதார்த்தத்தைக் கூறுவதானால், ஒரு நாட்டில் போர், குழப்பமான நிலைகள் மாறும் பட்சத்தில் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியோர் தமது நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதே சர்வதேச நியதி.

ஆனால், சிறீலங்காவை பொறுத்தவரையில் இன்று வரை வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய யாரும் சிறீலங்காவுக்கு திரும்பவில்லை. மாறாக சிறிலங்காவின் சகல பாகங்களிலிருந்தும் சகல இன மக்களும் இன்றும் அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஆகையால் சர்வதேச சமுதாயம் சிறீலங்காவை இன்றும் பிரச்சினைக்குரிய ஒரு நாடாக ஏற்றுக் கொள்கிறது.

அது மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்களை காண்பதற்காக வந்த சில புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இன்றும் பலர் சிறிலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாட்டை பொறுத்தவரையில் வெளிநாட்டில் வாழும் அந்த நாட்டு மக்களே அதனுடைய ‘விம்பமாக’ விளங்குகின்றனர். அரசு யாவரும் தமிழ், சிங்கள வேறுபாடின்றி “சிறிலங்காவை“ சேர்ந்த மக்கள் என அறை கூறுகிறது. அப்படியானால் மூன்றில் இரண்டு மக்கள் ஆதரவை பெற்ற ஒரு ஜனாதிபதியை எதிர்த்து, உலகின் முக்கிய தலைநகர் ஒன்றில் ஒரு நாட்டின் விம்பமாக விளங்கும் அந்த நாட்டு மக்கள,; பெரும் ஆர்ப்பாட்டம் செய்வது சர்வதேச சமுதாயத்தை திகிலடையச் செய்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசின் அணுகுமுறை, ஓர் இனம் அழிக்கப்படுவதற்கான அறிகுறிகளை சர்வதேச சமுதாயம் நிச்சயம் அறியக் கூடியதாகவுள்ளது.

அரசு தாம் வெளிநாட்டிலிருந்து பெறும் வெளிநாட்டுச் செலவாணி, சிறீலங்காவின் உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்வது யாவும் புலம்பெயர் வாழ் மக்களிலேயே தங்கியுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தற்போதைய சிறீலங்கா அரசின் போக்கில் நிச்சயம் ஓர் ஒருங்கிணைந்த அரசியல் தீர்வையோ அல்லது சமாதானத்தையோ ஒருமைப்பாட்டையோ நடைமுறைப்படுத்த முடியாது.

மாறாக பல் இன மக்களில் சுபீட்சமான வாழ்வு எதிராக வேறுபாட்டையும் துவேசத்தையும் அரசினால் வளர்த்து விடுவதற்கு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கப்படுகிறது.
சர்வதேச சமுதாயத்தின் சிறிலங்கா மீதான கழுகுப் பார்வை

நாம் யதார்த்தமாக நிலைமைகளை சர்வதேச ரீதியாக ஆராயும் வேளையில் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது எப்படியான ஒரு நிலைப்பாட்டை சர்வதேச சமுதாயம் கொண்டிருந்ததோ, அதே கழுகுப் பார்வையையே தற்பொழுது சிறீலங்கா அரசு மீதும் கொண்டுள்ளதை நாம் காணலாம். சிறீலங்காவிலிருந்து வெளியாகும் செய்திகள் யாவும் சிறீலங்கா அரசின் தர்மசங்கட நிலைகளை அப்படியே படம் எடுத்துக் காட்டுகின்றன. ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மெய்வல்லுனர்கள், கட்சி மாறுவதற்கு காத்திருப்பதையும் அரசு மற்றைய அரசியல் கட்சிகளை பிரித்து ஆள்வதையும் அரசுக்கு எதிரானவர் மீது பழி வாங்குவதையும் சிறிலங்காவின் ஒரு குடும்பத்தை தவிர்ந்த வேறு யாரும் சந்தோஷமாக இல்லாததையும் நாம் காணக் கூடியதாகவுள்ளது.

அண்மைக் காலத்தில் சிறீலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் கூறிய விடயம் மிகவும் வேடிக்கையானது. இனப் பிரச்சினைக்கான தீர்வு, நிலைமைக்கு ஏற்றவாறு மாறவேண்டும் என்கிறார். நாம் இவ் வாசகத்தை மிகவும் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டாலும் வெளிநாட்டு அமைச்சரிடம் நாம் கேட்க விரும்புவது என்னவெனில் இச் சிந்தனைகள் ஏன் முன்னைய தீர்வை விட குறைந்ததாக இருக்க வேண்டும்?

பாடசாலைக் காலத்தில் படித்த ஒரு சிறுகதை

இங்கு நான் பாடசாலைக் காலத்தில் படித்த ஒரு சிறுகதையை சுருக்கமாகக் கூற விரும்புகிறேன்.

ஓர் அரசனுக்கும் மகாராணிக்கும் நீண்ட காலமாக பிள்ளை பாக்கியம் இல்லாது கவலையுடன் வாழ்ந்தனர். அவர்கள் கடவுள் மீது வைத்த நம்பிக்கையின் பலனாக மகாராணி யார் நீண்ட காலத்தின் பின்னர் கர்ப்பமாகி ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மிகவும் சந்தோஷத்திலிருந்த அரச குடும்பத்திற்கு இளவரசன் பிறந்து சில ஆண்டுகளின் பின்னர் இன்னுமொரு துன்பம் உருவாகியது. அதாவது தவமிருந்து பெற்ற இளவரசன் பல ஆண்டுகளாகியும் பேச ஆரம்பிக்கவில்லை. ஆனால் அரச குடும்பத்து சோதிடர், நிச்சயம் உங்கள் குழந்தை ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பேச ஆரம்பிப்பார் எனக் கூறிவிட்டார்.

சோதிடத்தில் நம்பிக்கை கொண்ட அரச குடும்பம் அந்தக் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அரண்மனையில் கூடி இளவரசனின் மழலைப் பேச்சைக் கேட்க ஆவலாய் இருந்தனர். இளவரசனும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தமது மழலைப் பேச்சை ஆரம்பித்தார். இந்த இளவரசன் கூறிய மழலைப் பேச்சினால் அரசன் வாழ்நாளில் என்றுமில்லாதவாறு மிகவும் கவலையடைந்தார். பேச ஆரம்பித்த இளவரசர், தனது தாயை மகாராணியை பார்த்து, “அம்மா நான் எப்பொழுது அப்பாவின் சிம்மாசனத்தில் இருப்பேன்“ எனக் கேட்டு விட்டார்.
ஓர் இளவரசன் தனது இளம் பருவத்தில் சிம்மாசனத்திலிருக்க வேண்டுமானால் அரசன் நிச்சயமாக ஏதோ விபரீதத்தை சந்திக்க வேண்டும் என்பதாகும்.

இப்படியான நிலைகள் உலகில் மத்திய கிழக்கில் ஓமான், ஆபிக்காவில், கொங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ளன.

ஆகையால் ஓர் அரசியல் தொழிற்சாலையில் என்ன உற்பத்தி செய்யப்படும் என்பது யாருக்கும் தெயாது. சிறீலங்காவிலும் எத்தகைய நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!

 


தொடர்புடைய செய்திகள்: