ஜோதிட அறிக்கைகளின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அரசாங்கத்திற்கு கெட்ட காலமாம். எனவேதான் அரசு தேர்தல்களை முன்கூட்டியே நடத்துகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், எந்தவொரு உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் நடத்தாது அதிகார சபையாக்குவதற்கு அரசாங்கம் நினைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐ.தே. க.வின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழு கூட உள்ளது. இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக வேட்பாளர் தெரிவுக்குழு பிரசார நடவடிக்கைகள் மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பான விஷேட குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் அறிவித்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 303 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஐ.தே.க. யானை சின்னத்தில் போட்டியிடும். ஏனைய அரசியல் கட்சிகள் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட விரும்பினால் புதிய கட்சி யாப்பின் பிரகாரம் ஐ.தே.க.வின் உறுப்புரிமையை பெற வேண்டும்.
ஏனென்றால் கடந்த தேர்தல்களில் ஐ.தே.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் கட்சிக்கு எதிராகவே பலர் செயற்பட தொடங்கினர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை கூட எடுக்க முடியாமல் போனது. இதனால்தான் கட்டாய உறுப்புரிமை பெற வேண்டும் என்று அறிவித்துள்ளோம்.
மேலும் புதிய முகங்களை அதிகமாக களத்தில் இறக்க ஐ.தே.க. தெவுக்குழு தீர்மானித்துள்ளது. அரசாங்கம் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு மறைந்து தேர்தல்களில் கெடுபிடிகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.
குறிப்பாக தமக்கு சாதகமில்லாத உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்தாமல் விடவும் தீர்மானித்துள்ளது என்றார்.
| < முன் | அடுத்தது > |
|---|




