நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இன நல்லுறவும் புரிந்துணர்வும் ஏற்பட்டுள்ளன. நீண்டகாலமாக இருந்த இனக்குரோதம், முடிவுக்கு வந்து இன
நல்லுறவு நிலவுகின்றது. எனவே மீண்டும் இனக் குரோதத்தை ஏற்படுத்த எவரும் முயலக்கூடாது. என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
உடலில் ஏற்பட்ட புண்ணை ஆற்றுவதற்கு முயலவேண்டுமே தவிர அதனை ஆழப்படுத்தக்கூடாது. குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகள் இனவாதத்தை தூண்டாது செயற்படவேண்டும். இன்றேல் இந்தப் பகைமை உணர்வை ஒருபோதும் முடிவுக்கு கொண்டு வரமுடியாது.
இந்த நாட்டை பிரிப்பதற்கு பிரபாகரன் முயற்சித்தார். அந்த எண்ணம் கைகூடவில்லை. இந்தநாட்டை எவரும் கூறுபோட நான் அனுமதிக்க மாட்டேன். இன்று வடகிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும், சில தமிழ் ஊடகங்கள், இணையத்தளங்கள் என்பன தவறான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும்.
கிளிநொச்சியைப் பொறுத்தமட்டில் 27 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அங்கு இரண்டரை பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. களுத்துறையிலும், அம்பாந்தோட்டையிலும், நான் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறுகிறார்கள். ஆனால் கிளிநொச்சிக்கே இந்தளவு பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஊடக நிறுவனப் பணிப்பாளர்கள், தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடக முக்கியஸ்தர்கள் ஆகியோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை அலரிமாளிகையில் சந்தித்து உரையாடினார். நாட்டின் நடப்புக்கள், அரசியல் நிலைவரங்கள், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் விலையேற்றங்கள் தொடர்பில் இங்கு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் ஊடகவியலாளர் ஜனாதிபதியிடம் கேட்ட கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு:
கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரச குழுவினருக்குமிடையில் அண்மையில் பேச்சுக்கள் இடம் பெற்றன. இது எந்தளவு தூரம் வெற்றிகரமாக அமைந்தது?
பதில்: நாங்கள் இது தொடர்பில் குழுவொன்றை அமைத்துள்ளோம். பேச்சுக்கள் சுமுகமான அடிப்படையில் இடம் பெற்றன. இது முதலாவது சந்திப்பு. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பவை தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன என்றார்.
கேள்வி: யாழ்ப்பாணத்தில் அடிக்கடி கொலை, கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் இடம் பெறுவதாகவும், 6 மணிக்குப் பின்னர் மக்களை வீதியில் காணமுடியவில்லையெனவும் கூறப்படுகின்றதே அது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: தமிழ் பத்திரிகைகளில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் இடம் பெறுவதாக அடிக்கடி பிரசுரிக்கப்பட்டு வருகிறது. கொழும்பில் கூட அவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதுண்டு. கொழும்பில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். புஞ்சி பொரளையில் வயோதிப பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் பலபகுதிகளிலும், இடம் பெற்று வருகின்றன. அவற்றை ஒடுக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதனை யார் செய்கிறார்கள்? எதற்காக செய்கின்றார்கள், என்பது குறித்து பொலிஸார் கண்டறியவேண்டும். இத்தகைய சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இடம் பெறுவதில்லை. நாட்டின் பல பகுதிகளிலும், இடம் பெற்றே வருகின்றன. அது மாத்திரமன்றி ஆறு மணிக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் சன நடமாட்டம் இல்லையென்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கு சென்ற பலர் இதை என்னிடம் கூறியுள்ளனர். மக்கள் தங்கள் கடமைகளை சர்வசாதாரணமாகவே மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே யாழ். மக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றார்கள் என்று கூறுவது தவறானதாகும். ஊடகங்களும் இணையத்தளங்களுமே இவ்வாறான தவறான செய்திகளை பிரசுரித்து வருகின்றன என்றார்.
கேள்வி: நாட்டில் வன்முறைகள், அதிகரித்தும், வாழ்க்கைச் செலவு உயர்ந்தும் அமைதியீனங்கள் தலைதூக்கியும் உள்ளன. இதற்கு சீரான முகாமைத்துவம் இல்லாமையே காரணம் என கருத முடியுமா?
பதில்: நாட்டை தோல்வி அடைந்த இராஜ்ஜியமாக காட்ட சிலர் முனைகிறார்கள். நான் அவ்வாறு ஒருபோதும் நினைக்கவில்லை. நாம் எம்மால் முயன்ற அனைத்தையும் செய்து நாட்டை சிறந்த வகையில் கட்டியெழுப்ப முனைகின்றோம். எமது பொலிஸார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தம்மாலான முயற்சிகளை செய்து வருகின்றனர். போதைப் பொருள் விற்பனை, கொலை என்பன இலங்கையில் மாத்திரமல்ல அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும், இடம் பெற்று வருகின்றன. பட்டப்பகலில் அமெரிக்காவில் படுகொலைகள், இடம் பெறுகின்றன. அமெரிக்காவில் பாடசாலைக்குள் புகுந்து படுகொலையில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் அது குறித்து நீங்கள் பேசுவதோ எழுதுவதோ கிடையாது. முன்னர் இலங்கையில் புலிகள் கண்மூடித்தனமாக பலரைச் சுட்டுக்கொன்றார்கள். குறிப்பாக தமிழ் அரசியல் பிரமுகர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் அது குறித்து தமிழ் பத்திரிகைகள் எதுவும் கண்டிக்கவோ, விமர்சிக்கவோ இல்லை. தற்போது எமது அரசாங்கத்தை குற்றம் சுமத்துகின்றீர்கள். உங்களுக்கு அதற்கான உரிமை உண்டு. அதை நான் இல்லை என்று கூற வரவில்லை. ஆனால் அநாவசியமாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைப்பதை விடுத்து அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள முன்வரவேண்டும் என்றார்.
கேள்வி: இணையத்தளங்களில் இலங்கை தொடர்பில் தவறான தகவல்கள் வெளிவருகின்றனவே, அது தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: இணையதளங்கள் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அது தொடர்பில் நாம் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் நீங்கள் உங்கள் பத்திரிகைகளில் அது தொடர்பில் எம்மை விமர்சித்து எழுதுவதுடன் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்பட்டதாக குரல் எழுப்புவீர்கள், அது மாத்திரமன்றி அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது குறித்து முறையிடுவீர்கள். ஜி.எஸ். பி. பிளஸை நிறுத்துமாறு கோருவீர்கள், எம்மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துமாறு கூறுவீர்கள், உலகில் ஒரு இடமும் இல்லாதவாறு இலங்கையிலேயே இவ்வாறு சம்பவங்கள் இடம் பெறுவது போல இவை சித்திரிக்கப்படுகின்றன.
அதிகமாக தமிழ் பத்திரிகைகள், இணையங்கள், தவறான தகவல்களை பிரசுரித்து வருவதாக நான் அறிகிறேன். நான் கூறுவது தவறாகக் கூட இருக்கலாம். எனக்கு மொழி பெயர்த்து கூறுபவர்கள் அவ்வாறுதான் கூறுகிறார்கள். அதையே நானும் கூறுகிறேன். எனவே நான் இரண்டு தடவை அதனை சரிபார்க்க வேண்டிய நிலை உள்ளது. அல்லது நான் நேரடியாகவே தமிழ் கற்றே இதனை அறிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தை விமர்சிப்பதை, தாக்கி எழுதுவதை நான் குறைகூறவில்லை. அவ்வாறு செய்வது தவறுமல்ல. எனினும் உலகிற்கு தவறான தகவல்களை பிரசுரித்து நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுக்கவோ நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவோ எவரும் முயலக்கூடாது. பத்திரிகைகள், ஊடகங்கள் சரியான தகவல்களை, உண்மையான தகவல்களை பொறுப்புணர்வுடன் முன்வைக்க முன்வரவேண்டும்.
யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருட காலத்தில் அதிக எண்ணிக்கையான முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்துள்ளோம். 1977 ஆம் ஆண்டு இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மூன்று வருடங்களுக்குப் பின்னரே புனர்வாழ்வு அளிக்கப்பட்டனர். அதுமாத்திரமன்றி தங்காலை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை இளைஞர்கள், டயர் போட்டு எரிக்கப்பட்டார்கள். ஆனால், அவ்வாறான காரியங்கள் எமது ஆட்சியில் ஒரு போதும் இடம்பெறவில்லை என்றார்.
கேள்வி: மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்கள், தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா?
பதில்: மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வெள்ள நிலைமை காணப்படுகின்றது. விரைவில் காலநிலை சீரடைந்து விடும். எனினும் இதுவரை உள்ளூராட்சித் தேர்தலை பின்போடும் நோக்கம் இல்லை என்று தெரிவித்தார்.
கேள்வி: சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக விளங்கிய லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் விசாரணைகள் எதுவும் முன்னேற்றகரமாக இல்லாதுள்ளது. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்: இந்த கொலை தொடர்பில் சாட்சி எதுவும் இருக்குமானால் அதனை நீங்கள் எமக்கு கூறினால் அதன் விசாரணையை துரிதப்படுத்த எமக்கு உதவியாக இருக்கும். முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன், கதிர்காமர், தசாநாயக்க போன்றோரும் இவ்வாறே படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களின் விசாரணையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பொலிஸார் சந்தேகத்திற்கிடமானவர்களைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். எனினும் இந்தக் கொலைகளை நேரில் கண்டவர்கள் எவரும் இல்லாதிருப்பதால் விசாரணைகள் தாமதமடைகின்றன. இதனை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற அவசரம் அரசாங்கத்திற்கும் உள்ளது என்றும் பதிலளித்தார்.
கேள்வி: அண்மைக்காலமாக உணவுப் பொருட்கள், மரக்கறி வகைகளின் விலைவாசிகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன இது பற்றி தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
பதில்: அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்ததுடன் சிற்சில காலங்களில் பொருட்களின் விலைவாசிகள் உயர்வதும் பின்னர் வீழ்ச்சியடைவதும் தொடர்ந்து வருகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நிலவிய விலைவாசியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தற்பொழுது வெகுவாக குறைந்துள்ளது. அதாவது 100 க்கு 26 வீதம் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். அத்துடன் அப்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி தற்போது குறைவடைந்துள்ளது என்றார்.
கேள்வி: ஊடகங்கள் தவறாக விமர்சிப்பதாக குறிப்பிட்டீர்கள், வெளிநாடுகளிலும் இவ்வாறான நிலைமையையே காணமுடிகின்றது. அண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு தாம் உதவப் போவதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இது குறித்து தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: எவரும் எவருக்கும் உதவ முடியும். இந்தியா, இலங்கையின் அயல்நாடு மாத்திரமல்ல மிக நெருங்கிய நண்பனும் கூட. அந்த வகையில் இலங்கையில் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவே உதவியது என்று தெரிவித்தார்.
| < முன் | அடுத்தது > |
|---|




