விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு மாற்று அமைப்புக்களால் அல்லது தனிப்பட்ட குரோதங்களால் ஏதாவது பாதிப்புக்களும் ஆபத்துக்களும் ஏற்படலாம் என்பதால் மூன்றுமாதங்கள்
அவர்களைக் கண்காணிக்கின்றோம். இராணுவச் சீருடையிலோ அல்லது பொலிஸ் உடையுடனோ அன்றி, சிவில் உடையில் அவர்களுக்கும் கூட தெரியாமலே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்கிறார் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க.
நேற்றுக்காலை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரிகேடியர் இதனைத் தெரிவித்தார்.உள்நாட்டு வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு, புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரிகேடியர் சுசந்தரணசிங்க விளக்கம் அளித்தார். இவருடன் புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க உட்பட திணைக்கள அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
பிரிகேடியர் விளக்கம் அளிக்கும்போது தெரிவித்ததாவது, புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுதலையாகும் முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்வதானால் அவர்களுக்கான கடவுச்சீட்டுகள் சாதாரண சிவிலியன்களுக்கு வழங்கப்படுவது போன்றே வழங்கப்படும். கட்டுப்பாடுகளோ அல்லது நிபந்தனைகளோ விதிக்கப்படமாட்டாது.அரசு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இராணுவ நடவடிக்கையின் மூலம் புலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கருதவில்லை. பேச்சுக்கள் மூலம் பிரச்சினை தீர்வுகான பல சந்தர்ப்பங்களை அரசு வழங்கியது. ஆனால் புலிகள் எல்லாவற்றையும் நிராகரித்து விட்டனர். அதன் காரணமாகவே முழு மூச்சாக இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.யுத்தம் முடிவுற்ற வேளையில் 11,696 போராளிகள் சரணடைந்தனர். இவர்கள் 24 புனர்வாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இப்பொழுது ஒன்பது நிலையங்களில் 5764 பேர் மட்டுமே இருக்கின்றனர். ஏனையோர் கட்டம் கட்டமாகப் புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோரிடமும் குடும்பங்களுடனும் சேர்த்து வைக்கப்பட்டனர்.சரணடைந்த போராளிகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டனர்.
- பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்திய பாரதூரமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.
- பலவந்தமாக சேர்க்கப்பட்டு சிறுசிறு சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள்.
- சுயமாக இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டு சரணடைந்தவர்கள், என தரப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் தலா 500 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஆண்,பெண், சிறுவர்கள் என தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர். இவர்களின் பராமரிப்பு செலவினங்களுக்காக அரசாங்கம் தலா நூறு மில்லியனை செலவிட்டுள்ளது. இம்முறை 73 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்றார் பிரிகேடியர்.
| < முன் | அடுத்தது > |
|---|




