கிழக்கில் 15 தினங்களுக்குப் பின்னர் மீண்டும் அடைமழை பெய்து வருவதால் பெரும் வெள்ள அபாயம் தோன்றியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். இம்முறை அம்பாறை மாவட்டம் பெரும் இடரை
எதிர்கொண்டுள்ளது. நேற்று முழு நாளும் அங்கு இடைவிடாது கடும் மழை பொழிந்தது. இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகள் பலவற்றிலும் கனமழை பொழிந்து வருகிறது. மீண்டும் மண்சரிவு, வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று மாலை வரையில் வெள்ளத்தால் 4 பேர் உயிரிழந்தனர் என்றும் 3,000 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தது.
நாட்டில் எட்டு மாவட்டங் களில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக நேற்று மாலை வரை 3,000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் 13 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் பலவீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்தார்.
நால்வர் உயிரிழப்பு
அடை மழையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். அம்பாறையில் இருவரும் வவுனியா மற்றும் பதுளையில் தலா ஒருவரும் இறந்தனர். அவர்களில் குழந்தை ஒன்றும் அடங்கும். அத்துடன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்றும் கொடிப்பிலி கூறினார்.
அம்பாறையில் கடும் பாதிப்பு
அம்பாறையில் கடும் மழை தொடர்வதால் மாவட்டத்தின் பிரதான நீர்தேக்கமான சேனநாயக்க சமுத்திரம் நிரம்பிய வண்ணம் உள்ளது. அதேசமயம், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச தமிழ், முஸ்லிம் கிராம மக்கள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பிலிருந்து மக்கள் மீட்சி பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை முதல் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையால் முன்னரைவிடவும் கூடிய வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான சேனநாயக்க சமுத்திரத்தின் (கல்லோயா) நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றது. 110 அடி உயரம் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் நேற்றுப் புதன் கிழமை காலை 106 அடிக்கு நீர் நிரம்பியது. ஆறுலட்சத்து தொண்ணூறாயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நீர் தேங்கி இருந்தது. இதனால் நீர்த் தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் நேற்றுத் திறக்கப்பட்டன. மொத்தமாக ஆறு வான் கதவுகளே இதற்கு உள்ளன. வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் மாவட்டத்தின் கரையோரப் பகுதி மக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மழை வெள்ளம் ஒரு பக்கம் இருக்க சேனநாயக்க சமுத்திரம் நிரம்பியதால் வெளியேற்றப்படும் நீரும் சேர்ந்து மாவட்டத்தையே வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளன.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பதினைந்து நாள்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ள கோர மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குளங்கள், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதனால் பல வருடங்களுக்குப் பின்னர் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் தாழ்நிலம் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்தந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பாகவுள்ள பொலிஸார் கிராமம் கிராமமாகச் சென்று ஒலிபெருக்கிமூலம் அறிவித்துள்ளனர்.
பாடசாலைகள் மூடப்பட்டன
கிழக்கு, மத்திய மாகாணங்களில் பல பாடசாலைகளுக்கு நேற்று முற்பகல் 11மணியுடன் மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து தடைப்பட்டது
பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளமையால் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பிரதேசங்களுக்கிடையிலான தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஒருசில பிரதேசங்களுக்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம்
மலையகத்தில் மலைப்பாங்கான பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அப்புத்தளை தொடம் அத்த, கொஸ்காகும்புர கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவால் 5 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.
மாவட்ட ரீதியிலான நிலைவரங்கள் வருமாறு:
- மட்டக்களப்பில் 16 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
- மட்டக்களப்பில் உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் எட்டு அடி உயரத்துக்கும், உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான்கதவுகள் 11அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் 3 வான்கதவுகள் நான்கு அடி உயரத்துக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன.
- நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதனால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெல்லாவெளி மண்டூருக்கு இடையிலான போக்குவரத்தும் மட்டக்களப்பு படுவான்கரைக்கு இடையிலான போக்குவரத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
- வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
- திருகோணமலையில் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1,657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,361 பேர் 11 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. அத்துடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
- கந்தளாய் குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதனால், திருகோணமலை மூதூருக்கு இடையிலான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சீரற்ற காலநிலை தொடரும் பட்சத்தில் பாடசாலைகளை மூடுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
- அம்பாறை மாவட்டத்தில் 150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இக்னியாகல அணைக்கட்டின் வான் கதவுகள் அனைத்தும் 30 வருடங்களுக்குப் பின்னர் நேற்று திறந்துவிடப்பட்டுள்ளமையால், நிந்தவூர், மல்லிகைத்தீவு, மல்வத்த, இஸ்மாயில்புரம், மீனகாடு ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.
- 6 வருடங்களுக்குப் பின்னர் சேனநாயக்க சமுத்திரத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன என அம்பாறை மாவட்ட அரச அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.
- குறித்த பிரதேசங்களில் பதற்றம் நிலவுவதுடன், சம்மாந்துறை பிரதேசத்துக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன், பலர் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மலையகத்தில்
மலையகத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மாத்தளை மாவட்டத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்தோட்டை, தம்புள்ளை, உக்குவெலை ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அங்கெல்லாம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.குறிப்பாக மலையகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வீதிப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையகத்திலுள்ள பல பாடசாலைகள் நேற்று 12 மணியுடன் மூடப்பட்டன.
பதுளை, ஹாலிஎல,பண்டாரவளை, தியத்தலாவை,பொறலந்தை,வெலிமடை ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட பல இடங்களில் மண்சரிவுகளும், வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சுமார் 32 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்துக்கு உட்பட்டு அவர்கள் இடைத்தங்கல் முகாமில் உள்ளனர் என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.தியத்தலாவை, குறுத்தலாவை, பொறலந்த ஆகிய பிரதேசங்களில் நேற்றுமுன்தினம் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால் பல வீதிகளில் பாரிய மரங்கள் முறிந்தும், வேரோடு விழுந்தும் உள்ளன. இதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் முற்றாக வீதி மூடப்பட்டுள்ளது.
| < முன் | அடுத்தது > |
|---|




