விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த புதிதாக 25 இடங்களில் சந்தைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள புதிய தலைமைச்செயலகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச்செயலர் மாலதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் தற்போது இயங்கும் 154 உழவர் சந்தைகளை வலுப்படுத்தவும், கூடுதலாக 25 இடங்களில் உழவர் சந்தைகளைப் புதிதாகத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது கூட்டுறவு அமைப்புகள் மூலமாக ஒரு நாளைக்குச் சுமார் 20 டன் காய்கறிகள் நியாய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, பிற மாநகராட்சிப் பகுதிகளில் கணிசமான அளவு காய்கறி விற்பனை மையங்களை உடனடியாகத் தொடங்கி, காய்கறி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
| அடுத்தது > |
|---|




