ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா "2 ஜி" ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குத் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மத்திய புலனாய்வுத்
துறையால் டில்லியில் நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.
ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே. சந்தோலியாவும் கைதுசெய்யப்பட்டனர்.இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பலர் கைதாகலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.கைதுசெய்யப்பட்டுள்ள ராசாவும், அவரது பரிவாரங்களும் இன்று பாட்டியாலாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ. அறிவித்துள்ளது.மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராசா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூபா ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ராசா ஏற்படுத்தினார் என மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை அளித்தது. இதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு அலைகளால் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி மத்திய அமைச்சர் பதவியை ஆ.ராசா இராஜிநாமாச் செய்தார். ராசா வகித்து வந்த பதவி கபில் சிபலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் 8ஆம் திகதி ராசாவின் வீடு உட்பட 14 இடங்க ளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.டிசம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 31ஆம் திகதி நடத்திய விசாரணைக்கு பின்னர் நேற்றும் ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.இந்த நிலையில் 2 ஜி ஊழல் தொடர்பாக அவரை சி.பி.ஐ. நேற்றுக் கைதுசெய்துள்ளது.
| அடுத்தது > |
|---|




